tamilnadu

img

எஸ்பிஐ : தமிழகத்தில் புதிதாக 50 கிளைகள்

மும்பை,ஆக. 8- நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் புதிதாக 50 வங்கிக் கிளைகளைத் திறப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது தொழில் வளர்ச்சியில் கிராமப்புறம் மற்றும் நடுத்தர நகர்ப்புறங்களில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 50 வங்கிக் கிளைகளைத் திறக்கவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் 1,220 வங்கிக் கிளைகள் இருக்கின்றன. இதில் 40 கிளைகள் மட்டுமே கிராமப்புறங்களில் உள்ளவை. எனவே கிராம மக்களுக்கு வங்கிச் சேவைகள் சீராகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிய கிளைகள் திறக்கப்படவுள்ளன. சொத்து மேலாண்மை வாயிலாகத் தமிழகத்தில் 15 சதவிகித வளர்ச்சியையும், ஒட்டுமொத்தமாக ரூ. 2,50,000 கோடி அளவிற்கு தொழில் வளர்ச்சியையும் அடைய ஸ்டேட் வங்கி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

வீட்டு வசதித் துறைக்கான கடனுதவிகள் கிடைப்பது கடினமாக இருப்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்த ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பண நெருக்கடி காரணமாக வீடுகள் வாயிலான முதலீடுகள் குறைந்துள்ள தாக இவ்வங்கியின் தமிழகப் பிரிவு தலைமைப் பொது மேலாளரான வினய் எம்.டோன்ஸே தெரிவித்துள்ளார். ஸ்டேட் வங்கியின் சில்லறை விற்பனைப் பிரிவுக் கடன்க ளில் வேளாண் துறைக்கு 24 சதவிகிதக் கடனும், வீடமைப்பு உள்ளிட்ட சில்லறைக் கடன்கள் பிரிவுக்கு 50 சதவிகிதக் கடனும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு 25 சதவிகிதக் கடனும் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டாலும் ஏடிஎம் எந்திரங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. தற்போ தைய நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4,700 ஏடிஎம்கள் உள்ளன.

;